தமிழ் மக்களின் ஆதரவினையும் பெற்று கோத்தாபய வெற்றிப்பெறுவார் – சுசில்

தமிழ் தேசிய கூட்டமைப்பினை புறக்கணித்துள்ள தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கமாட்டார்கள்.

தமிழ் மக்களின் ஆதரவினையும் பெற்று பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவினை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறலாம் என்று பல திட்டங்களை முன்னெடுத்த ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சி இன்று தோல்வியடைந்துள்ளது.

தமிழ் மக்களின் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது நன்மதிப்பினை இழந்துள்ளது. இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய ஆசனங்களை பெறவில்லை மாறாக தமிழ் மக்களின் வெறுப்புக்களையே தற்போது பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க முடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவினை வழங்கி வருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானத்தினை மதித்து இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானங்களை எடுக்கமாட்டார்கள். மாறாக சுயமாகவே அரசியல் தீர்மானத்தை எடுத்து பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவினை வழங்குவார்கள் .

ஜனாதிபதி தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் தற்போது ஆளும் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை கொலைகாரர் என்றும் ஒரு தரப்பினர் அரசியல் பிரச்சாரங்களை முன்னெடுப்பது காணக் கூடியதாகவுள்ளது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!