மீண்டும் தலைதூக்கும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கம்! – ரொய்டர்

நீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வார இறுதியில் ஒரு சகோதரர் ஜனாதிபதியாக கவனம் செலுத்துகின்ற நிலையில் மற்ற சகோதரர் அடுத்த வருட ஆரம்பத்தில் பிரதமராகுவதற்கு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற இரண்டு சகோதரர்கள் தங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் அரசியல் மூலோபாயவாதிகளாக செயற்படுகின்ற நிலையில் அவர்களில் ஒருவர் பாராளுமன்ற சபாநாயகராக மாறுவதற்கான தீர்மானத்தை பரிசீலித்து வருகிறார். குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் மூன்று ஆண்களும் அரசியலில் ஈடுபட எதிர்பார்த்திருப்பதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

முறையான கருத்துக் கணிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாச பின்னடைவில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது கோத்தாபய விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்.

போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தமிழ் தரப்பினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோத்தாபயவிற்கு எதிராக இலங்கையிலும் அமெரிக்காவிலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

மஹிந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு எதிராக திரும்பிய தனது அமைச்சரவையின் சக அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியுற்று வெளியேற்றப்பட்ட பின்னர், அவரது குடும்பத்தின் அதிர்ஷ்டம் வீழ்ச்சியடைந்தது.

பின்னர் ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து சிறிசேனவின் ஜனாதிபதி பதவி தடம் புரண்டது. மேலும் அவர் இந்த ஆண்டு போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இஸ்லாமிய அரசால் உரிமை கோரப்பட்ட இந்த தாக்குதல்கள், ராஜபக்ஷக்களுக்கும் அவர்களின் சிங்கள தேசிய வாதத்திற்குமான முத்திரையையும் மீண்டும் புதுப்பித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் கருத்து கணிப்பில் முன்னிலை வகிக்கும் கோத்தாபய, இந்த வார இறுதியில் ஜனாதிபதியாகுவதற்கும், அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகுவதற்கும், கோத்தாபய தலைமையிலான ஆட்சியில் சமல் ராஜபக்ஷ சபாநாயகராகுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!