19 ஆவது அரசியலமைப்பே அமைதியான தேர்தலுக்கு காரணம் – பிரதமர் ரணில் பெருமிதம்

நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலமாகவே சுதந்திரமானதும், அமைதியானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முடிந்திருக்கிறது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவின் வெற்றியின் பின்னர் கடந்தகால செயற்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

இன்று சனிக்கிழமை காலை எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவை எவ்வித தலையீடுகளுமின்றி சுதந்திரமாக செயற்பட்டன.

அதன் ஓரங்கமாகவே ,இம்முறை ஜனாதிபதித் தேர்தல் எவ்வித தலையீடுகளுமின்றி சுதந்திரமானதாகவும், நியாயமான முறையிலும் அமைதியாக நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவின் வெற்றியின் பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று நம்புகின்றேன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!