தேனிலவில் நிகழ்ந்த சோகம் – மனைவி கண்முன் கணவன் இறந்த பரிதாபம்!

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலுமணாலிக்கு தேனிலவுக்கு சென்ற சென்னை இளைஞர், பாரா கிளைடரில் பறந்தபோது மனைவி கண்முன்னே கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தக்கரையைச் சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும், பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக இமாச்சலப் பிரதேச மாநிலம் குலுமணாலிக்குச் சென்ற தம்பதி, அங்குள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்த்தனர். குலு அருகே டோபி என்ற இடத்தில் பாராகிளைடரில் சுற்றுலா பயணிகள் பறப்பது பிரபலமான ஒன்றாகும். 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவரை 2 ஆயிரம் ரூபாய் 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனைக் கண்ட அரவிந்தும், பிரீத்தியும் பாராகிளைடரில் பறக்க டிக்கெட் பதிவு செய்தனர். முதலில் பிரீத்தி பாராகிளைடரில் பறந்துவிட்டு கீழே இறங்கினார். இதனைத் தொடர்ந்து கணவர் உயரே பறந்து கொண்டிருந்ததை பிரீத்தி கீழே இருந்து ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

வானில் பறந்த சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் அரவிந்த் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு பெல்ட் கழன்றதாக கூறப்படுகிறது. பல அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரவிந்த் கீழே விழுந்தவுடன் பாராகிளைடரும் நிலைதடுமாறியதால் அவசரமாக கீழே இறக்க முயன்ற பாராகிளைடிங் பைலட் ஹரு ராமுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் குலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்லிகுஹால் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு, அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குல்லு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கணவரின் உடலை பார்த்து பிரீத்தி கதறி அழுதார். அர்விந்தின் உடலை ஹிமாச்சலப்பிரதேசத்தில் இருந்து டெல்லி கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது உடலைப் பெறுவதற்காக, சென்னையில் இருந்து அவரது உறவினர்கள் டெல்லி சென்றுள்ளனர். பிரீத்தி அளித்த புகாரின் பேரில், உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதுகாப்பு பெல்ட்டை சரியாக அணியாததே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பாராகிளைடரில் பறப்பது ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்தது என்றாலும், இதில் ஆபத்தும் நிறைந்துள்ளது. இதே இடத்திலும் கடந்த காலங்களில் விபத்துகள் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஏப்ரல் மாதம் கேரளாவைச் சேர்ந்த ஆல்த்தோ பச்சு, மே மாதம் மொகாலியை சேர்ந்த அமந்தீப் சிங் சோதி, ஆகஸ்ட் மாதம் ஐதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என இறந்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதுதவிர பலர் படுகாயங்களுடன் தப்பியதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பயிற்சி பெற்ற பைலட்டுகளைக் கொண்டே கிளைடர்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கோ, வேறு நாடுகளுக்கோ சுற்றுப்பயணம் செல்வோர் சாகச விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு முன் உரிய முன்னெச்சரிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியம் என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம்…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!