தேர்தல் தோல்வி தொடர்பில் என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன் : ரணில்

ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு நானோ அல்லது கட்சித் தலைமையகக் கட்டமைப்போ பொறுப்புக்கூற முடியாது.

தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக உரிய ஒத்தழைப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றேன்.

தேர்தலின் போது வடக்கு – கிழக்கு மாகாண பிரசாரப்பணியை நான் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அம்மாகாணங்களில் உயர்ந்த வாக்குவீதத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு என்னால் முடிந்திருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சிக்குக் காணப்பட்ட சிங்கள பௌத்த அடிப்படை இல்லாமல் போனமை தோல்வியில் தாக்கம் செலுத்தியிருப்பதாகவும், சரியான பௌத்த கொள்கையொன்றை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாகவே முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலையகமான சிறிகொத்தாவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை இன்று சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

எமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நான் பரிந்துரைத்தேன். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, அதற்குரிய பணிகளை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவும், அதனைச் சார்ந்த கட்டமைப்பும் சரிவர மேற்கொண்டது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

பிரசாரப் பணிகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். அதற்கு நானோ அல்லது கட்சித்தலைமையகக் கட்டமைப்போ பொறுப்பல்ல. நாம் எமது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்களை வழங்கினோம்.

அதனடிப்படையில் நான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் பிரசாரப் பணியைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். அதற்கமைய அம்மாகாணங்களில் எமக்குச் சார்பான வாக்குவீதத்தை அதிகரித்துக் கொள்வதற்கு என்னால் முடிந்திருக்கிறது.

ஆனால் துரதிஷ்டவசமாக தெற்கில் எமக்கான வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. சில மாவட்டங்களை எம்மால் வெற்றிகொள்ள முடிந்தபோதிலும் கூட, தேசிய ரீதியாக நோக்கும்போது நாம் தோல்வியடைய நேர்ந்தது.

கடந்த காலத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியமை, பாரியளவான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்தமை, சட்டம் மற்றும் ஒழுங்கை ஏற்படுத்தியமை, சமுதாய சேவைகளை மேம்படுத்தியமை ஆகியவற்றின் மூலம் நாம் எதிர்பார்த்த பிரதிபலிப்பைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அவற்றை விடவும் எமது கட்சிக்குக் காணப்பட்ட சிங்கள பௌத்த அடிப்படை இல்லாமல் போனமை தொடர்பில் முக்கிய அவதானம் செலுப்பட வேண்டும்.

இதற்கு முன்னர் இத்தகைய நிலையேற்பட்டதில்லை. எனவே இதுகுறித்து விசேடமாக ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். இத்தருணத்தில் ஒருவர் மீதொருவர் குற்றஞ்சாட்டுவதன் மூலமும், கை நீட்டுவதன் மூலமும் இதற்குத் தீர்வு கண்டுகொள்ள முடியாது.

மாறாக சரியான பௌத்த கொள்கையொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு மாநாயக்க தேரர்களினதும் ஆசியைப் பெற்றுக்கொள்வதுடன், புதியதொரு ஐக்கிய தேசியக் கட்சி என்ற அடிப்படையில் முன்நோக்கிப் பயணிப்போம்.

இந்நிலையில் எதிர்காலம் தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ளும் அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்வொன்றையும் மேற்கொள்ள வேண்டும். அதனூடாகவே எம்மால் முன்நோக்கிச் செல்லமுடியும்.

அத்தோடு கட்சியின் தலைவர்கள் எவரும் பிரசாரத்திற்கான நிதிமூலம் தொடர்பான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அதுகுறித்த குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன்.

ஆகவே கட்சி என்ற வகையில் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஆராய்ந்து, அவை உண்மைக்குப் புறம்பானவையாக இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.

மேலும் இத்தருணத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதுடன், புதிய தலைவர்களையும் நியமிக்க வேண்டியுள்ளது. தேர்தல் முடிவுகள் பற்றிய ஆராய்வின் ஊடாக புதிய கொள்கைகளை அவர்கள் முன்வைக்கவேண்டும். அதனூடாக எவ்வித அச்சமுமின்றி ஒன்றிணைந்து பயணிப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!