ஐ.தே.க. தீர்மானத்தை வெளியிட்டால் எதிர்க்கட்சித் தலைவரை அறிவிக்க முடியும் – கரு

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பேசி தீர்மானித்து இறுதி முடிவை அறிவிக்கும் வரையில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள சபாநாயகர் கருஜயசூரிய, விரைவில் இவ்விடயம் தொடர்பில் ஐ.தே.க அறிவித்தால் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை அறிவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்விடயம் தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தினால் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எதிர்க்கட்சி தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 57 பேர் கையெழுத்திட்டு நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளத்துள்ளனர்.

இவ்வாறு ஐக்கிய முன்னணி உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல சபாநாயகரால் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய 57 ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட குறித்த கடிதத்தின் பிரதியொன்று பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு சபாநாயகர் அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், ‘ 57 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள அதே வேளை, ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கட்சியாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக ‘ சபாநாயகர் குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இரு வேறு தரப்பினருக்கிடையில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. எனவே இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் தங்களுக்குள் பேசி தீர்மானமொன்றை எடுப்பதோடு, அந்த தீர்மானத்தை தனக்கு அறிவிக்க வேண்டும். அதற்கேற்பவே எதிர்க்கட்சி தலைவர் யார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியும்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் எமக்கு அறிவிக்கப்பட்டால் அடுத்த பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சபாநாயகர் அலுவலகத்தினால் அகிலவிராஜ் காரியவசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!