அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்களை பதவி விலக உத்தரவு!

அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் பதவி விலகுமாறு அறிவித்தல் விடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் டீ.ஜயசுந்தரவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அரச பொறுப்பு முயற்சிகள், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் நிதியச்சட்ட நிறுவனங்கள் ஆகியவற்றின் சபைகளிலிருந்து இராஜினாமா செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்டவற்றுக்கு தகுதிவாய்ந்த நபர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய நிரல் அமைச்சின் செயலாளர் என்ற வகையில் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் உரிய அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து அவர்களது அதிகார வரம்பின் கீழ்வரும் இந்நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரலாம்.

மேலும் புதிய பணிப்பாளர் சபைகள் நியமிக்கப்படும் வரை இந்நிறுவனங்களின் நாளாந்த அலுவல்களை முன்னெடுப்பதற்காக இடைக்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!