பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட ‘கம்முரி’ புயல்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லூசோன் தீவை நேற்று சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலுக்கு ‘கம்முரி’ என பெயரிடப்பட்டு உள்ளது. மணிக்கு 241 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக கடற்கரை நகரங்களிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. அத்துடன் லூசோன் தீவுக்கு உட்பட்ட அல்பே, சூர் மற்றும் சோர்சோகான் உள்ளிட்ட 6 மாகாணங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதில் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. கனமழையை தொடர்ந்து நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து கரைபுரண்டோடுகிறது. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் புயல் மற்றும் கனமழை காரணமாக தலைநகர் மணிலாவில் உள்ள விமானம் நிலையம் 12 மணி நேரத்துக்கு மூடப்பட்டது. இதனால் 500-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புயல் தாக்கிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கப்பல் போக்குவரத்தை நிறுத்த பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை உத்தரவிட்டு உள்ளது. அல்பே மாகாணத்தின் தலைநகர் லொகஸ்பியில் தகரத்திலான மேற்கூரையுடன் கூடிய வீட்டின் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் வீட்டில் இருந்த ஒருவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

‘கம்முரி’ புயல் காரணமாக சுமார் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். புயல் மற்றும் கனமழை மேலும் தொடரலாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் மேற்கூறிய 6 மாகாணங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கம்முரி புயல் காரணமாக பிலிப்பைன்சில் நடந்து வரும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விளையாட்டு போட்டிகள் தடைபட்டுள்ளன. சில விளையாட்டுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சில விளையாட்டுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டன.

புயல் பாதித்த பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது என அந்த நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி லுயிசிடோ மென்டோசா கூறினார். கம்முரி புயல் இந்த ஆண்டு பிலிப்பைன்சை தாக்கிய 20-வது புயல் ஆகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!