சூடான் தீவிபத்தில் 3 தமிழர்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு!

சூடானில் செராமிக் டைல்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய மேலும் 3 தமிழர்கள் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சூடான் நாட்டின் தலைநகரான கார்த்தோமின் வடக்கு புறநகர் பகுதியான பகரியில் சலோமி என்ற செரமிக் டைல்ஸ் நிறுவனத்தின் பெரிய டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட எரிவாயுவை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக எரிவாயு கசிந்து தீப்பற்றிக் கொண்டது. இந்தத் தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 130 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் இந்தியர்கள் 18 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மூன்று பேர் தமிழர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 3 தமிழர்கள் தீ விபத்தின் போது மாயமானதாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் கடலூர் மாவட்டம் மானடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியை அடுத்த ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதனிடையே தீ விபத்து நடந்த தொழிற்சாலையில் 60 இந்தியர்கள் பணியாற்றி வந்ததாகவும், அவர்களில் 53 பேர் தொழிற்சாலை மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்ததாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் செய்தி வெளியிட்டுள்ள அவர், உயிரிழந்வர்களின் எண்ணிக்கையையும், விபரங்களையும் அறிய முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அல்-அமால் மருத்துவமனை, ஒம்டுர்மான் டீச்சிங் மருத்துவமனை மற்றும் இப்ராஹிம் மாலிக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்தில் இந்தியத் தூதர் இருப்பதாகவும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் ஜெய்சங்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சூடான் தீ விபத்து குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.அதில் அவர், சூடான் தீ விபத்தில் தமிழர்கள் மூன்று பேரை காணவில்லை என்றும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே தமிழர்களை காக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார். சூடான் தீ விபத்தில் சிக்கிய தமிழக தொழிலாளர்களின் நிலை குறித்த முழுத் தகவலை உடனடியாக மாநில அரசுக்கு தெரியபடுத்த வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!