பெற்றோரை காக்க நிஜ அவ்வை சண்முகியாக மாறிய மகன்!

மதுரையில் தொழிலாளி ஒருவர் வயதான தன் பெற்றோரை காப்பாற்றுவதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் அவ்வை சண்முகி படத்தில் வருவது போல பெண் வேடமிட்டு வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். அவ்வை சண்முகி படத்தில் குழந்தைக்காக கமல் பெண் வேடமிட்டு வீட்டு வேலைக்கு செல்வது போல காட்சிகள் இருக்கும், அதே போல மதுரையில் ஒரு நிஜ சண்முகி வலம் வருகிறார்…!மானாமதுரை மலையனேந்தலை சேந்த ராஜாதான் தன்னை ராஜாத்தியாக மாற்றிக் கொண்டு வீடுகளில் வேலை பார்த்து வரும் தொழிலாளி..! தனது கிராமத்தில் இருந்து பேருந்து மூலம் மதுரைக்கு லுங்கி சட்டையுடன் வரும் ராஜா, மறைவான இடத்திற்கு சென்று மேக்கப்புடன், நீண்ட தலைமுடியுடன் கூடிய விக் அணிந்து சேலை கட்டி பெண்ணாக வேடமிட்டுக் கொள்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து தான் வேலை பார்க்கும் வீடுகளுக்கு சென்று வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு மீண்டும் மாலையில் ராஜாத்தி வேடத்தை கலைத்து லுங்கி சட்டையுடன் ராஜாவாக வீட்டுக்கு செல்கின்றார்.

40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத ராஜா, பசியில் வாடிய தனது தாய் தந்தையை காப்பாற்ற ஆரம்பத்தில் வேலைதேடி அழைந்தபோது எந்த வீட்டிலும் ஆண்களுக்கு வேலையில்லை என்று விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு தானே பெண்ணாக மாறினால் வீட்டு வேலைகளாவது கிடைக்குமே என்றெண்ணி, பெண் போல வேடமிட்டுச் சென்று 3 வீடுகளில் வேலைக்கு சேர்ந்து சம்பாதித்து வருவதாக தெரிவித்தார்.

மாறுவேடத்தில் வீட்டு வேலைக்கு செல்வது என்பதே குற்றம். அப்படி இருக்க பெண் வேடமிட்டு வீட்டு உரிமையாளர்களை நம்பவைத்து ஏமாற்றி வீட்டு வேலைக்கு செல்வது என்பது அடையாளங்களை மறைத்தல், நம்பிக்கை மோசடி போன்ற தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை உணர்ந்தாவது இது போன்ற விபரீத முயற்சிகளை கைவிட வேண்டும் என்பதே இவரை பற்றி விபரம் அறிந்தவர்களின் அறிவுரையாக உள்ளது

தனது பெற்றோரை சாகும் வரை கவலையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தாயுமானவனாக இருந்து பணிவிடைகளை செய்து வருவது வரை சரிதான்… ஆண்களுக்கு வேலையே இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறும் காவல்துறையினர், ராஜா மாறுவேடம் போட்டு ராஜாத்தியாக மாறுவது விபரீத செயல் என்று எச்சரிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!