அவதூறு பரப்பினாலும் விடமாட்டேன்! – ஜனாதிபதி ஆவேசம்

உண்மைக்கு புறம்பாக தன் மீது அவதூறு பரப்பிய போதும், நீதியை நிலைநாட்டுவதில் தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மறைந்த சோபித தேரரின் பிறந்ததின நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

“நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் நான் வரப்போவதில்லை என கூறியதாக கேள்விப்பட்டேன். இந்த விழாவுக்கு வரும்படி எனக்கு எந்த அழைப்போ, அறிவிப்போ கிடைக்கவில்லை. இந்த நாட்டில் ஏனைய விடயங்களும் இவ்வாறுதான் நடைபெறுகின்றன.

இந்த மன்றத்தின் தலைவரை நானே நியமித்திருக்கின்றேன். ஆகை யால், இங்கு ஏதேனும் விசேட நிகழ்வு நடைபெறுமாயின் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் அதைப் பற்றிக் கூறுவார்.” அவ்வாறே நேற்று மாலை என்னிடம் அவர் “நாளைக்கு சோபித தேரரின் நினைவு கூரல் நடக்கின்றது அதற்கு நீங்கள் வருகிறீர்களா?” எனக் கேட்டார். அதற்கு நான் “நாளையா? எத்தனை மணிக்கு? “ என்று கேட்டேன். அவர் “மூன்று மணிக்கு” என்றார். அத்தோடு எனது பெயரும் அழைப்பிதழில் இருப்பதாக கூறினார். அதற்கு நான் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாதெனக் கூறினேன். எனது தனிப்பட்ட செயலாளரிடமும் சோபித தேரரின் ஞாபகார்த்த விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்ததா என கேட்டேன். அப்படியெதுவும் வரவில்லை எனக் கூறினார்.

எனது அலுவலகத்திலும் கேட்டுப் பார்த்தேன். கடைசியில் எனது ஊடக பணிப்பாளரிடமும் கேட்டேன். அதற்கு அவர் இந்த நிகழ்வினை ரவி ஜயவர்தனவே முன்னின்று நடத்துகிறார் என்று கூறினார். அதன் பின்னர் நான் ரவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளை அவ்வாறானதொரு நிகழ்வு இருக்கின்றதா எனக் கேட்டேன். நான் அவ்வாறானதொரு நிகழ்வு இருப்பதாக கேள்விப்பட்டேன் என்றும் எனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அவரிடம் கூறினேன்.

அதன் பின்னர் அதுபற்றி தேடிப் பார்த்திருப்பார் என நினைக்கிறேன். பின்னர் சொற்ப வேளையில் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டஅவர், “சேர் ஒரு தவறு நடந்திருக்கின்றது. எல்லோரும் எவராவது உங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார்கள் என நினைத்திருக்கின்றார்கள். ஆனால் எவரும் உங்களுக்கான அழைப்பினை கொடுத்திருக்கவில்லை என்றார்.

தேரர் அவர்களே! நீங்கள் உங்களது அறிவுரையின் போது நான் வரப்போவதில்லை எனக் கேள்விப்பட்டு மனம் வருந்தியதாக கூறினீர்கள். அதற்குக் காரணம் நீங்கள் கூட, இவர் வருவார் அப்படி வந்தால் கூற வேண்டியவற்றை அழுத்தம் திருத்தமாக கூறிவிட வேண்டும் என நினைத்திருப்பீர்கள். அப்படி நினைத்த உங்களுக்கு நான் வரவில்லை என்ற வதந்தியைக் கேட்டதும் மனவருத்தம் ஏற்பட்டிருக்கும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை நான் பெற்ற பிறகு தான் நாட்டின் வேலைகள் மோசமடைந்தது என நீங்கள் கூறினீர்கள். தேரர் அவர்களே, இந்த வேலைகள் எவ்வாறு கைகூடாது போனது என்பது பற்றி மிகத் தெளிவாக என்னால் கூற முடியும். தேரர் அவர்களுக்கு அல்ல என்னுடன் கலந்தரையாடவோ விவாதிக்கவோ எவரேனும் வருவாராக இருப்பின் அவர்களிடமும் என்ன நடந்தது என்பதைப் பற்றி என்னால் கூற முடியும்.

சோபித தேரர் அவர்களுடனான எனது உறவு அவர் காலம் செல்வதற்கு 25 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்து வந்தது. குறிப்பாக யுத்த காலத்தின் போது தூரப் பிரதேச கிராமங்களுக்கு சென்று மக்களின் சுகம் விசாரித்து அவர்களுக்குத் தேவையான உணவுகளை பெற்றுக் கொடுத்து அவர் பெரும் சேவையினை ஆற்றினார். அதற்காக அவர் திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று வந்தார். அப்பிரதேசங்களை நான் ஒருபோதும் எல்லைப் புற கிராமங்கள் என்று கூறவிரும்பவில்லை.

தேரர் அவர்களே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நான் பொறுப்பேற்றதாலே இந்த அரசாங்கம் வீணாகிப் போனதென நீங்கள் கூறினீர்கள். பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அச்சமயம் 47 ஆசனங்களே இருந்தன. அப்போது பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு142 ஆசனங்கள் இருந்தன. இதில் 127 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் குரியவை . அச்சமயம் 100 நாள் வேலைத் திட்டத்தை எவர் உருவாக்கினார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆயினும் அச்சமயம் என்னைப் பொது வேட்பாளராக தேர்ந்தெடுந்தமைக்கு நான் நன்றி தெரிவிப்பதுடன் மகிழ்ச்சியும் அடைகின்றேன். ஆனால் பொதுவேட்பாளராக நான் வந்திராவிட்டாலும் வேறு எவரை பொது வேட்பாளராக நிறுத்தியிருந்தாலும் வெற்றி பெற்றிருக்கலாம் எனப் பலர் இன்று கூறுகின்றனர்.

அப்படியென்றால் ஏன் அவர்கள் அவ்வாறு வேறு ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்தவில்லை. எதற்காக ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்? அப்படித் தேர்ந்தெடுப்பதற்கு வேறொருவர் இல்லாததாலேயே என்னைத் தேர்ந்தெடுத்தனர்.

இன்று டெய்லிமிரர் பத்திரிகையில் மஹதீர்மொஹமதின் படத்தை இடது புறமும் எனது படத்தை வலது புறமும் பிரசுரித்து மஹதீர்மொஹமட் ஆட்சிக்கு வந்து ஐந்து நாட்களில் செய்தவேலைகளும் நான் 03 வருடங்களாக எதைச் செய்திருக்கிறேன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

மலேசியாவில் 09 அமைச்சர்களைக் கைது செய்ததாகவும் விமான நிலையத்தை மூடியதாகவும்,முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பம் வெளியேறுவதைத் தடுத்ததாகவும், 144 வர்த்தகர்களைக் கைது செய்ததாகவும் ஐம்பது நீதிவான்களை கைது செய்ததாகவும் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பத்திரிகையைப் பார்த்துவிட்டு நான் மலேசியாவிலிருக்கும் எமது தூதரகத்திடம் பேசி இந்தச் செய்தி தொடர்பான உண்மை நிலவரத்தை வினவினேன். அதற்கு அவர்கள் அந்தச் செய்தி அப்பட்டமானபெய் எனக் கூறினர். கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களிலும் இதையே பெரிதுபடுத்திக் காட்டப்பட்டது. நான் சரியாகச் செயற்படவில்லை என்று கூறவே எத்தனித்துள்ளனர்.

நாங்களும் கடந்த மூன்றரை வருடங்களுக்குள் பலரைக் கைது செய்து பல விசாரணைகளை செய்து வருகின்றோம். ஆனால் அந்தநாட்டுக்கும் எமது நாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எவரும் சரியாக எடுத்துக் கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமரும் அவர்களுக்குத் தேவையான வாகனங்களை பெற்றுக் கொண்ட பின்பு எனக்கு கடந்த இரண்டரை வருடங்களாக பாவிப்பதற்கு பழைய வாகனங்களே எஞ்சியிருந்தன. முன்னாள் ஜனாதிபதிக்கு விமானப்படையின் விமானத்தை பெற்றுக் கொடுத்தது மற்றும் ஏனைய மோசடி பற்றிய விசாரணைகள் ஆகியவற்றை முன்னெடுக்க விடாது தடுத்தது யார் என்பது தெரிந்தவர்களுக்கே தெரியும். அவற்றை தெளிவு படுத்த வேண்டிய நேரத்தில் நான் தெளிவு படுத்துவேன்.

எந்தவித மோசடிகளிலும் ஈடுபடாது நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் உழைத்த என்மீது அவதூறு சுமத்துபவர்களுக்கு ஒரு விடயத்தை நான் மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டுமக்கள் என்மீது வைத்த நம்பிக்கையை கட்டாயம் நான் நிறைவேற்றியே தீருவேன். உண்மைக்குப்புறம்பாக என்மீது அவதூறு பரப்பியபோதும் நான் நீதியை நிலைநாட்டியே தீருவேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!