எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் : ஐதராபாத் பெண் வைத்தியரின் தந்தை

இந்தியாவின், ஐதராபாத்தில் 4 பேரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றதால் தனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும் என்று பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்டு எரித்துக்கொலைசெய்யப்பட்ட கால்நடை பெண் வைத்தியரின் தந்தை தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27 ஆம் திகதி இரவு கால்நடை பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சேர்லாப்பள்ளி சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்றது.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை பொலிஸார் சிறையில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்திற்கு இன்று அதிகாலை குற்றவாளிகளை அழைத்துச் சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர் பொலிஸார்.

அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதால் 4 பேரும் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்தியப் பொலிஸாரின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக கொலைசெய்யப்பட்ட பெண் வைத்தியரின் தந்தை கூறியதாவது:

என் மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. குற்றவாளிகள் 4 பேரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றதால் எனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும்.

4 பேரை சுட்டுக்கொன்ற பொலிஸாருக்கும் தெலுங்கானா அரசுக்கும் நன்றி கூறுகிறேன். என பெண் வைத்தியரின் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து அங்குள்ள பாடசாலை மாணவிகள் கல்லூரி பஸ் வண்டியில் சென்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அத்துடன் ஐதராபாத்தில் கல்லூரி சென்ற மாணவிகள் வீதிகளில் பாதுகாப்புக்கு நின்ற பொலிஸாரை பார்த்து கைகாட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!