சுவிஸ் தூதரக பணியாளரின் வாக்குமூலம் – நாளை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பெண் பணியாளரிடம் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நாளை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் நாள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிரியலதா என அழைக்கப்படும், கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற உள்நாட்டு தூதரகப் பணியாளர் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, நொவம்பர் 27ஆம் நாள், சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக், சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார்.

இதையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து, குற்ற விசாரணைப் பிரிவில் கடந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களும், முன்னலையாகிய சுவிஸ் தூதரக பணியாளரிடம், நீண்ட விசாரணைகள் நடத்தப்பட்டன.

19 மணி நேரம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதுடன், சட்டமருத்துவ அதிகாலையிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

இவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாடு ஆகியன தொடர்பாக பகுப்பாய்வு செய்யும் குற்ற விசாரணைப் பிரிவு, நாளை நீதிமன்றத்தில் அதுதொடர்பான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவம் கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதித் திட்டமே இது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!