சுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டாரா?- மறுக்கிறது சுவிஸ் அரசு

சிறிலங்காவில் இருந்து சுவிற்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளை சுவிஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகப் பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து, தமது தூதுவரை சுவிஸ் அரசாங்கம் அழைத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

இதுகுறித்து சுவிஸ் வெளிவிவகார சமஷ்டித் திணைக்களத்தின் பேச்சாளரிடம், கொழும்பில் இருந்து தூதுவர் மொக் திருப்பி அழைக்கப்பட்டுள்ளாரா அல்லது, அழைக்கப்பட்டுள்ளாரா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்துள்ள சுவிஸ் வெளிவிவகார திணைக்கள பேச்சாளர், “இந்த தகவல் சரியானது அல்ல, சுவிஸ் தூதுவர் தற்போது கொழும்பிலேயே இருந்து பணியாற்றி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் பொய்யானது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவரும் நிலையில், சுவிஸ் தூதுவர், கடத்தப்பட்ட பணியாளர் தொடர்பாக சிங்கள ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பல வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!