பாலியல் வழக்குகளை 6 மாதத்தில் முடிக்கவேண்டும்: உயர்நீதிமன்றங்களுக்கும் மத்திய அரசு கடிதம்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் வழக்குகளில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என நாட்டின் உயர்நீதிமன்றங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஹைதராபாத் பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளிகளால் தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்டதும் நாட்டின் கூட்டு மனசாட்சியை உலுக்கியது.

இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் பாலியல் பலாத்கார வழக்குகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல, மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இத்தகைய வழக்குகளில் 2 மாதங்களில் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சட்ட அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் வழக்குகளை விரைந்து முடிக்க மேலும் 1023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இத்தகைய 700 விரைவு நீதிமன்றங்கள் உள்ள நிலையில், அவற்றின் எண்ணிக்கை 1723 ஆக உயர உள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!