ஒரே குடும்பத்தின் கையில் 154 அரச நிறுவனங்கள்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ,அவரது மூத்த சகோதரர்களான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பல அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வந்துள்ள நிலையில் இதுவரையில் பாதுகாப்பு அமைச்சராக எவரும் இல்லை. ஆகவே யார் பாதுகாப்பு அமைச்சர் என்பது தொடர்பில் அரசாங்கம் நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோதாவில்இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது ,

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பொறுப்பிலுள்ள அமைச்சுக்களுக்கு கீழான விடயதானங்கள் உள்ளடக்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. அதன் படி முப்படை , பொலிஸ் , மற்றும் அரச புலனாய்வு துறை ஆகியன உள்ளடங்கலாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சின் கீழ் இருந்த அரச நிறுவனங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் பொறுப்பின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி ஜனாதிபதி அமைச்சு பொறுப்பை வகிக்க முடியாது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பல அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என அவர் இதன்போது தெரவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!