வியாபாரிகளிடம் நூதன முறையில் மோசடி செய்த கும்பல்!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழிநுட்பங்களுக்கிடையே சைபர் கிரைம்களும் அதிகரித்து வருகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. இதனிடையே நன்மையிலும் ஒரு தீமை இருக்கும் என்ற கூற்றுக்கு ஏற்ப, தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும் அதை வைத்து பணத்தை திருடும் மோசடி கும்பல் கைவரிசையை காட்டி வருவது நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தகவல் தெரிவித்துள்ள ஹைதராபாத் நகர போலீசார், மொத்தமாக ஆர்டர்களை வழங்குவதாக கூறி வியாபாரிகளிடம் தந்திரமாக பேசி அவர்களை ஏமாற்றி டிஜிட்டல் திருட்டை நிகழ்த்தி வருவதாக கூறியுள்ளனர். மோசடி செய்பவர்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் பிராண்டட் நிறுவனங்களைச் சேர்ந்த கடைக்காரர்களை குறிவைத்து மோசடி செய்து வருவதாக கூறியுள்ளார்.

சைபர் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் உத்தரபிரதேசத்தின் மதுராவைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ள போலீசார், முதலில் அவர்கள் குறி வைக்கும் கடைக்காரர்களை தொடர்பு கொண்டு மொத்தமாக பொருட்களை வாங்கி கொள்தாக கூறி நம்ப வைத்து அவர்களின் மொபைல் மற்றும் யுபிஐ தகவல்களை பெற்று கொண்டு நூதனமாக ஏமாற்றி வருகின்றனராம்.

இது பற்றி கூறிய காவல்துறையினர், ஒரு தொழிலதிபரை தொடர்பு கொண்ட மோசடி கும்பல் அவரிடமிருந்து 20 லிட்டர் ஹைட்ராலிக் எண்ணெயை ரூ21,000 கொடுத்து மொத்தமாக வாங்கி கொள்வதாக கூறியுள்ளது. இதனை நம்பிய வியாபாரி அவர்கள் கேட்டபடி யுபிஐ பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் மொபைல் எண் தொடர்பான தகவல்களை அளித்துள்ளார்.

பின்னர் வாட்ஸ்அப் மூலம் அவருக்கு கியூஆர் குறியீட்டை அனுப்பி, ஃபோன்பே வழியாக பணம் செலுத்துவதற்கான கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யச் சொன்னார்கள். அதன்படி, அவர் கியூஆர் குறியீட்டை மூன்று முறை ஸ்கேன் செய்தார். இதன் விளைவாக அவரது கணக்கிலிருந்து ரூ .56,000 திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே வியாபாரிகள் இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். வியாபாரங்களை நேரில் அல்லாமல் தொலைபேசியில் மட்டுமே கையாளும் போது, கவனமாக வர்த்தகம் செய்ய வியாபாரிகளை எச்சரித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!