சிறிலங்காவின் நடவடிக்கை – சுவிஸ் அதிருப்தி, எச்சரிக்கை

சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளரான கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் அல்லது சிரியலதா பெரேரா கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்களை, சுவிஸ் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

சுவிஸ் சமஷ்டி வெளிவிவகாரத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.

”தவறான வாக்குமூலங்களை வழங்கினார் எனக் கூறி கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பணியாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவு குறித்து, சுவிஸ் வெளிவிவகார சமஷ்டி திணைக்களம் கரிசனை கொண்டுள்ளது.

தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு இணங்க, ஊழியர்களின் தனிப்பட்ட உரிமைகள் சிறப்பாக பாதுகாக்கப்படுவதை சிறிலங்கா நீதித்துறை அதிகாரிகள், உறுதி செய்ய வேண்டும் என்று கோருகிறது.

சுவிஸ் வெளிவிவகார சமஷ்டி திணைக்களம் மற்றும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் என்பன, முழுமையான பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றுவதுடன், அதன் பணியாளர்களுக்கு முடிந்தவரை ஆதரவளிக்கும்.

உள்ளக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக, சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் நொவம்பர் 25 அன்று அவரது விருப்பத்திற்கு மாறாக கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பானன நடைமுறைகளின் போது, பாதிக்கப்பட்டவரும் சுவிஸ் தூதரகமும் சிறிலங்கா அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்தன.

சட்டஆட்சிக்கு உட்பட்டு செயற்படுமாறு சுவிஸ் வெளிவிவகார சமஷ்டி திணைக்களம் பலமுறை கோரியது.

குறிப்பாக, தூதரக பணியாளரின் உடல்நிலை மோசமாக இருந்த போதிலும் மூன்று நாட்களாக 30 மணி நேரம் விசாரணை நடத்திய போதும், விசாரணை முடிவதற்கு முன்னரே, சிறிலங்காவின் மூத்த அதிகாரிகள், பொதுமக்கள் முன் தங்கள் விளக்கங்களை கொடுத்த போதும், சுவிஸ் வெளிவிவகார சமஷ்டி திணைக்களம் விமர்சித்தது.

பணியாளர் கைது செய்யப்பட்ட பின்னர், சிறிலங்கா நீதித்துறை அதன் சொந்த சட்டத் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், அனைத்துலக நியமங்களுக்கு இணங்குவதற்கும், முன்னரை விட தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களம் எதிர்பார்க்கிறது.

சிறிலங்கா அதிகாரிகள் பொருந்தக் கூடிய சட்டத்தின்படி தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் மற்றும் பணியாளரின் ஆரோக்கியத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களம் கோருகிறது.

இந்த விடயத்தில், அரசியலமைப்பின்படி செயற்படும் அரசு என்ற சிறிலங்காவின் நற்பெயருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை சுவிஸ் வலியுறுத்துகிறது.

இந்த பாதுகாப்பு சம்பவத்தை தீர்ப்பதற்கு ஒரு பொதுவான மற்றும் ஆக்கபூர்வமான வழியைத் தேடுவதாக சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களம் சிறிலங்கா அதிகாரிகளிடம் திரும்பத் திரும்பக் கூறியுள்ளது.

டிசம்பர் 16, அன்று, கொழும்பிற்கான சுவிஸ் தூதுவர் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடன் நடத்திய நேரடி உரையாடலிலும் இதை கோடிட்டுக் காட்டினார். ” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!