விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை இந்த அரசு விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – சிவமோகன் கோரிக்கை

கடந்த அரசின் காலத்தில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை இந்த அரசு விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவமோகன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அவர் ஊடகவியலாளர்களுக்கு இன்றைய நிலைப்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக முல்லைத்தீவு பொது மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்கப்பட வேண்டி கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நீண்ட போராட்டங்களை நடத்தி வந்திருந்தனர். இந்த போராட்டங்கள் ஐ.நா சபையின் காதுகளுக்கு எட்டும் வரை பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுமக்களின் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இன்றும் இராணுவத்தின் பிடியில் உள்ளது.

இந்த காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களின் காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கைகளிலும் நிரந்தர வேலிகளை அமைக்கும் பணிகளிலும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் வெண்புறா இருப்பிடம் அமைந்திருந்த காணி பொதுமக்களுக்கு தேவையான அரச காணி அதையும் ஒட்டு மொத்தமாக 75 ஏக்கர் காணியை இராணுவம் அபகரிப்பதற்காக வேலியிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

682 இராணுவ முகாம் மற்றும் புதுக்குடியிருப்பில் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காணிகளை கூட இன்னும் விடவில்லை. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இராணுவம் வைத்திருக்கும் பொதுமக்களின் காணிகளை நிரந்தரமாக அபகரிக்கும் நடவடிக்கை என்று தெரிய வருகிறது.

தமிழ் மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இராணுவத்தின் அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு முண்டு கொடுக்க ஆரம்பித்தால் பொது மக்கள் முல்லைத்தீவு மண்ணில் ஜனநாயக போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை உருவாகும் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!