நாட்டின் இறைமை, சட்டத்தை சுவிஸ் மதிக்க வேண்டும் – சிறிலங்கா அரசு

சிறிலங்காவின் சட்டம் மற்றும் இறையாண்மையை மதிக்குமாறு சுவிஸ் அதிகாரிகளிடம் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாட்டைச் செய்தார் என்ற குற்றச்சாட்டில், சுவிஸ் தூதர பணியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, கவலை வெளியிட்டும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் சுவிஸ் வெளிவிவகார திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரன,

“சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணையில் இருந்து விலகி, சட்டத்தை அதன் பாதையில் செல்ல அனுமதித்துள்ளது.

தூதரக பணியாளர் குற்ற விசாணைத் திணைக்களத்திடம் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். எனவே விசாரணையை தொடர அனுமதிப்போம்.

அனைத்து நாடுகளும் சிறிலங்காவை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மதிக்க வேண்டும்.

அதிபர் கோத்தாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள சுவிஸ் தூதுவருடன் கலந்துரையாடிய போது, தூதரக பணியாளரை கடத்தியதாகக் கூறப்படுவது அரசாங்கத்தின் விம்பத்தை கெடுப்பதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதை என்று விளக்கியிருந்தார்.

பொய்யான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் சுவிட்சர்லாந்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!