யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார் சம்பந்தன்? – சிறிகாந்தா கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கூறிய கருத்தை தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா கடுமையாக கண்டித்துள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்-

தமிழ் மக்களின் இன விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்படடமை நல்லதொரு விடயம் என சம்பந்தன் கூறியமை ஓர் பாரதூரமான கருத்தாகும். இதனை சாதாரண ஒருவர் கூறமாடடார்கள். இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அதிலும் 2009 ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பெருந்தலைவராக கூறப்பட்ட அவரது வாயில் இருந்து இவ்வாறான கருத்து வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் உச்சம் பெற்ற நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்படட போது வடக்கு மண்ணில் எவ்வளவு அழிவுகள் இடம்பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இறுதிப் போரில் பலர் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவுகள் வருடக் கணக்கில் போராடி வருகின்றனர்.தமிழ் மக்களின் பலம் வாய்ந்த பேரம் பேசும் சக்தியாக தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தனர்.

அவர்களின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இப்போது தென்னிலங்கையில் இந்த நாடு பௌத்த சிங்கள நாடு இது சிங்கள தேசம் என குரல்கள் கொடுக்கின்றனர். வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கு தாம் எண்ணத்தை கொடுத்தாலும் வாயை மூடிக்கொண்டு கைநீட்டி வாங்குவார்கள் என எண்ணுகின்றனர்.2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த போது தென்னிலங்கையில் உள்ளவர்கள் கொண்டாடினார்கள்.

அது அவர்களின் இயல்பு ஆனால் தமிழ் மக்களின் இனப் பிரச்சனை, பேரம் பேசும் சக்தியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விடுதலைப் புலிகள் அழிந்தமை நல்ல விடயம் என கூறியிருப்பது எம்மிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு நல்ல விடயம் என எந்தவகையில் கூறுகின்றார்? யாரை திருப்திப் படுத்த கூறுகின்றார்? என்பதை அவரே கூற வேண்டும். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் கருத்துக்கு நாம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!