சம்பிக்கவை சிறையில் சந்தித்த ரணில்!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைது ஜனநாயக சம்பிரதாயங்களை மீறியதொன்றாகும். பாராளுமன்ற உறுப்பினரொருவரை கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய சம்பிரதாயம் இதன் போது மீறப்படுள்ளது என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பிக்க ரணவக்கவை சிறைக்குச் சென்று சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டிருப்பது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாகவே ஆகும். அவ்வாறு அவர் கைது செய்யப்படுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. பொலிஸார் இந்த விடயத்தில் விதிமுறைகளை மீறியே செயற்பட்டுள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் நீதிமன்றம் பொலிஸ், அரச வேலை என்பனவற்றை அரசியல் மயமாவதிலிருந்து விடுவித்துள்ளோம். நீதித்துறை பொலிஸ் செயற்பாடுகள் அரச சேவைகள் சுயாதீனமாக செயற்பட வாய்ப்பை பெற்றுக் கொடுத்தோம்.

ஆனால் ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட நாடொன்றை கட்டியெழுப்ப உறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் சம்பவங்களை பார்க்கின்ற போது அதன் பின்னணியில் அரசியல் நோக்கமே காணப்படுகின்றது. சட்டம், ஒழுங்கு, சம்பிரதாயம் அனைத்தும் மீறப்படுவதையே பார்க்கக் கூடியதாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!