லங்கா மருத்துவமனையில் ராஜித அனுமதி – சிஐடி சுற்றிவளைப்பு

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் முன்பிணை கோரியிருந்த நிலையில், சட்ட மாஅதிபரின் உத்தரவுக்கமைய நீதிமன்றத்தினால் அவருக்கு பிடியாணை வழங்கப்பட்டிருந்தது.

ராஜித சேனாரத்னவின் கொழும்பு மற்றும் பேருவளையில் உள்ள வீடுகளுக்கு சென்று அவரைத் தேடி வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று பிற்பகல் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து அவரது கொழும்பிலுள்ள வீட்டை சோதனையிட்டிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நேற்று இரவு 7.40 மணியளவில் நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இருதய அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக அங்கு சென்ற , குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பெற முயன்றனர் எனினும், அதற்கு அனுமதி அளிக்கப்பட்டதா என தகவல்கள் வெளியாகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!