வெள்ளை வான் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்!

ஊடக சந்திப்பில் சொல்லப்பட்ட வெள்ளை வான் தொடர்பாக குற்றச்சாட்டை விசாரணை செய்யாமல், அந்த சந்திப்பை ஏற்பாடு செய்த நபரை விசாரணை விசாரிப்பது பிரச்சினைக்குரிய விடயம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளை வான் விவகாரம் என்பது நேற்றோ அல்லது அதற்கு முன்னைய நாளோ பேசுபொருளான விடயமொன்றல்ல. இவ்விடயம் தொடர்பில் கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

அவ்வாறிருக்கையில் அதுகுறித்து இருவர் சில வெளிப்படுத்தல்களைச் செய்யும்போது அவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ராஜித சேனாரத்னவை சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்ய முயற்சிப்பது ஏற்புடையதன்று.

இத்தகைய செயற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

‘வெள்ளை வேன்’ விவகாரம் என்பது நேற்றோ அல்லது அதற்கு முன்னைய நாளோ பேசுபொருளான விடயமல்ல. இவ்விடயம் தொடர்பில் கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

வெள்ளை வேன் என்று கூறினாலும் கூட, அதன் பின்னணியின் என்ன கதை இருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறார்கள். அவ்வாறிருக்க இருவர் வந்து நாங்கள் தான் வெள்ளை வேனின் சாரதிகள் என்றும், அவ்விவகாரம் தொடர்பில் நன்கு அறிவோம் என்றும் கூறும்பட்சத்தில் அதுகுறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவர்கள் கூறுவது உண்மையா? பொய்யா? அத்தகைய சம்பவங்கள் எங்கு நடைபெற்றது? அவற்றுக்கு வேறு சாட்சிகள் உள்ளதா? என்று ஆராயப்பட வேண்டும். உண்மையில் கடந்த காலத்தில் ‘வெள்ளை வேன் கடத்தல்’ சம்பவங்கள் நடைபெற்றன என்று எம்மனைவருக்கும் தெரியும். உதாரணத்திற்கு நானே இத்தகைய சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் பலவற்றில் சட்டத்தரணியாக ஆஜராகியிருக்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!