பொதுத் தேர்தல் ஆசன ஒதுக்கீடு – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் இழுபறி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனங்களைக் பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவுகள் எட்டப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இதன்போது முக்கியமாக வேட்பாளர் பட்டியலில் ஆசனப் பங்கீடு குறித்து ஆராயப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில், வேட்பாளர் பட்டியலில் 10 பேரின் பெயர்களை உள்ளடக்க வேண்டியுள்ள நிலையில், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் தலா 2 ஆசனங்களைக் கோருவதால் தமிழ் அரசுக் கட்சி நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

தமிழ் அரசுக் கட்சி யாழ். தேர்தல் மாவட்டத்தில், 7 ஆசனங்களில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளது. மூன்று இடங்களை மட்டும் ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு பகிர்ந்து கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்தில் ரெலோவுக்கு 3 இடங்களையும், புளொட்டுக்கு 2 இடங்களையும் ஒதுக்க முன்வந்துள்ள தமிழ் அரசுக் கட்சி 4 இடங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

எனினும், ரெலோவுக்கு ஒதுக்கப்படும் 3 இடங்களில் ஒரு இடத்தை, மலையகத் தமிழ் வம்சாவளி வேட்பாளர் ஒருவருக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தமிழ் அரசுக் கட்சி நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது,

ரெலோ அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளதுடன், தமிழ் அரசுக் கட்சி தன்னிடமுன்ன 4 ஆசனங்களில் ஒன்றை மலையக தமிழ் வம்சாவளி வேட்பாளருக்கு ஒதுக்குமாறு கேட்டுள்ளது.

எனினும், தமிழ் அரசுக் கட்சி தமது தற்போதைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் சத்தியலிங்கத்தையும் வேட்புமனுவில் சேர்க்க திட்டமிட்டுள்ளதால், அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் இந்தப் பேச்சுக்களில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து. கொழும்பில் இரா.சம்பந்தனும் பங்கேற்கும் கூட்டத்தில், மேலதிக பேச்சுக்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை ஆசனப் பங்கீடுகள் குறித்த பேச்சுக்களில் எந்த இழுபறிகளும் இல்லை என்று தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!