அரசியல் பழிவாங்கலை முன்னெடுத்து மக்களாணையினை பெற எவ்வித அவசியமும் இல்லை : சுசில்

நீதிமன்றின் செயற்பாட்டிற்கும் , விசாரணை பிரிவின் சுயாதீன விசாரணை நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்பது பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தன, சுவிஸ்தூதரக அதிகாரின் விவகாரத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கலை முன்னெடுத்து மக்களாணையினை பெற வேண்டும் என்ற அவசியம் இடைக்கால அரசாங்கத்திற்கு கிடையாது என சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரது கைது அரசியல் பழிவாங்கலை அடிப்படையாகக் கொண்டு இடம் பெறுகின்றன என்று எதிர்தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். அவர்களின் குற்றச்சாட்டு இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன.

வெள்ளை வேன் விவகார ஊடக சந்திப்பிற்கு தலைமை தாங்கியமை தொடர்பில் கடந்த வாரம் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றின் பிடியாணைக்கு அமைய கைது செய்யும் சூழ்நிலையில் காணப்பட்டார்.

பின்னர் நீதிமன்றின் தீர்மானத்திற்கு அமைய பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றச்சாட்டில் இருந்து அவர் முழுமையாக விடுப்படவில்லை.

அரசாங்கம் ஆட்சியமைத்து ஓரிரு நாட்களுக்குள் வெள்ளைவேனில் தான் கடத்தப்பட்டதாக சுவிஸ் தூதர அதிகாரி குறிப்பிட்ட விவகாரம் சர்வதேசத்தின் மத்தியில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

இந்த பிரச்சினையை இராஜதந்திர மட்டத்தில் கையாள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி இலங்கை பிரஜை அணைவரும் பொதுச்சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். முறையான விசாரணைகளை தொடர்ந்து அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில்பொய்யான விடயங்களை உள்ளடக்கி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் என்ற கோணத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

மேற்குறிப்பிட்ட இவ்விரு விடயங்களையும் எதிர்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். நீதிமன்றத்தினதும், சுயாதீன விசாரணை பிரிவுகளிலும் அரசாங்கம் தாக்கம் செலுத்துகின்றது என்று குறிப்பிட்டமை இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு அமைய இன்று நீதிமன்றம் சுயாதீனமான முறையில் இரு வருக்கும் நீதி வழங்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!