ஆஸ்திரேலியா காட்டுத்தீ: குட்டிகளை காப்பாற்ற போராடும் கங்காருகள்!

ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா, நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகிற பகுதிகளில் வசிக்கும் சுமார் 1 லட்சம் பேர், வீடுகளை விட்டு வெளியேறும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை காட்டுத்தீயில் 25 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த காட்டுத்தீ காரணமாக தென் கிழக்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் வெப்ப நிலை 104 டிகிரியை கடந்துள்ளது. இந்நிலையில், எங்கெங்கு காணினும் தீ பிழம்புகள், உயிரை பிடித்துக்கொண்டு தப்பிக்கும் உயிரினங்கள், தாகத்துக்காக ஏக்கத்துடன் மனிதனை எதிர்நோக்கும் கோலா கரடிகள், குட்டிகளை தன் பையில் பத்திரப்படுத்தி தாவி குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட கங்காருகள் என ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகள் காட்டுத் தீயால் ஓலமிடுகின்றன.

காட்டுத் தீ பரவி வருவதால் அங்கு வாழும் உயிரினங்கள் அழிந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் விலங்குகளையும் இயற்கை ஆர்வலர்கள் காப்பாற்றி வருகின்றனர். இந்த காட்டில் சிறிய விலங்கான டன்னார்ட் என்ற உயிரினம் ஆஸ்திரேலியாவில் கங்காரு தீவுகளை தவிர வேறு எங்கும் காணப்படுவதில்லை. அவை முற்றிலுமாக அழியக் கூடிய சூழலில் இருக்கிறது.

இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான உயிரினங்கள் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அரிய வகை செடிகள் மற்றும் பூக்களுக்கு பெயர் பெற்ற ஆஸ்திரேலிய காடுகள் 5.8 மீட்டர் ஹெக்டேர் தீப்பிடித்துள்ளது. கங்காரு, பறவைக் கூட்டங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல விலங்கியல் ஆர்வலர்கள் ஆஸ்திரேலிய காடுகளின் நிலையை எண்ணி கவலை தெரிவித்துள்ளனர். கரடி இனங்களில் அழகானதாக கருதப்படும் கோலா கரடிகள் காட்டு தீயால் படும் துன்பம் கண்ணீரை வரவைக்கிறது. இதுபோன்ற அரிய வகை உயிரினங்களை முடிந்தவரை தன்னார்வலர்கள் காப்பாற்றி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!