ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் நீதித்துறையை கேள்விக்குறியாக்கியுள்ளது – லக்ஷ்மன் யாபா அபேவர்தன

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் நாட்டின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளன.

நீதித்துறையுடன் தொடர்புடையவர்களிடம் அவர் தொலைபேசியில் உரையாடிருக்கும் விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஊடக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன, எதிர்க்கட்சியும் இவ்விடயம் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘ ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் ‘ பற்றி கருத்து தெரிவிக்கையில் இதனை கூறிய அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கும் போது அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதாகவே பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றோம். ஆனால் தற்போது ரஞ்சன் ராமநாயக்க போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம் அரசியமைப்பை முற்றிலும் மீறும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.

ரஞ்சன் ராமநாயக்க நீதித்துறையுடன் தொடர்புடையவர்களிடம் தொலைபேசியில் பேசியிருக்கும் விடயங்கள் மக்கள் நீதித்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கின்றது.

நாம் கடந்த காலத்திலும் நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டிருந்தோம். தற்போதும் கொண்டிருக்கின்றோம். எனவே குற்றம் இழைத்தவர் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுக்கள் அமைத்து தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!