தூத்துக்குடி கலவரத்தில் கைதாகியவர் ஜெயிலில் மர்ம மரணம்

தூத்துக்குடியில் நடந்த கலவரத்தையொட்டி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடம் அருகே உள்ள திரவியபுரத்தை சேர்ந்தவர் பரத்ராஜா (வயது 36). தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் பரத்ராஜாவின் தம்பி தனசேகரனுக்கு கடந்த 23-ந் தேதி தூத்துக்குடியில் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பரத்ராஜா 17-ந்தேதி முதல் 23ம் தேதி வரை 7 நாள் பரோலில் ஊருக்கு வந்தார்.

இதனிடையே 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த கலவரத்தையொட்டி 23-ந் தேதி போலீசார் வீடு வீடாக சென்று பலரை கைது செய்தனர். அப்போது பரத்ராஜாவையும் போலீசார் பிடித்துச்சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் காயமடைந்த பரத்ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 30ந்தேதி பரத்ராஜா, சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பரத்ராஜாவின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டது. பரத்ராஜாவை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அவரை தாக்கியதாகவும், அப்போது அவர் காயம் அடைந்து சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது மாஜிஸ்திரேட்டிடம் அவர் வாக்குமூலம் அளித்ததில் போலீசார் தன்னை அடித்து உதைத்ததாக தெரிவித்துள்ளார்.

போலீசார் தாக்கியதால் தான் பரத்ராஜா இறந்ததாக கூறி, அதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். பரத்ராஜா குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும், அதுவரை பரத்ராஜாவின் உடலை வாங்கப்போவதில்லை என்று பரத்ராஜாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பரத்ராஜாவின் உடலை வாங்க மறுத்து நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால் பரத்ராஜாவின் உடல் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இன்றும் 3-வது நாளாக பரத்ராஜாவின் உடலை உறவினர்கள் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!