என்னைக் கொல்ல ரணிலுடன் இணைந்து ரஞ்சன் சதி!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், இணைந்து என்னை கொல்ல ரஞ்சன் ராமநாயக்க சதிசெய்தார் என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றம்சாட்டியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் உலாவும் குரல் பதிவு தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்தேன். ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் பிரதமர் ரணிலுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதோடு மஹிந்தானந்த அலுத்கமகேயை சுடுவதற்கே துப்பாக்கி பயிற்சி எடுப்பதாக கூறியுள்ளார். தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ரணில் கூறியுள்ளார். என்னை கொலை செய்வதற்கு ரஞ்சன், முன்னாள் பிரதமரின் ஆசிர்வாதத்தை கோரியுள்ளார். அந்த அனுமதியை அவர் வழங்குவது குரல் பதிவிலுள்ளது. இது பாரதூரமான விடயமாகும்.எம்.பி ஒருவரை கொலை செய்வதற்கு பிரதி அமைச்சர் ஒருவர் பிரதமருடன் சதி செய்துள்ளார்.

மாதிவல பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுத் திட்டத்தில் ரஞ்சன் ராமநாயக்க துப்பாக்கிப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி உதய சாந்த எம்.பி முறைப்பாடு செய்திருந்தார். தன்னை பொலிஸ் மா அதிபரே பாதுகாத்ததாக ரஞ்சன் கூறியிருந்தார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பிணைமுறி குறித்தும் மோசடிகள் குறித்தும் நாம் குரல் கொடுத்தோம். அது எம்.பிக்களின் உரிமையாகும். ஆனால் எம்மை கொலை செய்வதற்கு முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவர், முன்னாள் பிரதமரின் ஆலோசனை பெற்றுள்ளார். இது மிகவும் பாராதூரமானது. பிரபலமடைவதற்காக எதனையும் செய்வேன் என ரஞ்சன் ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

எமது வாயை அடைக்க வேண்டும் என ரஞ்சன் கூறியது குரல் பதிவில் உள்ளது. நாம் எதிரணியாகச் செயற்படுகையில் எமது வாயை மூட முயற்சிப்பதா ஜனநாயகம். இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிட வேண்டும்.

ரஞ்சனின் 1,21 000 சீ.டிகளில் 5 மாத்திரமே வெளியில் வந்துள்ளன. பொலிஸ் நிதி மோசடி பிரிவு அதிகாரிகளை அலரி மாளிகைக்கு நேரடியாக அழைத்து ரணிலும் ரஞ்சனும் அஜித் பி பெரேராவும் ஆலோசனை வழங்கியுள்ளார்கள். இது பற்றி முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ பகிரங்கமாக கூறியிருந்தார்.

இவற்றுக்கு சகல அமைச்சர்களும் பொறுப்பு கூற வேண்டும்.அவர்கள் இது பற்றி அறிந்திருந்தார்கள். தங்களுக்கு எதிராக பேசிய அனைவரையும் கொல்ல சதி செய்யப்பட்டது. இது எனது சிறப்புரிமை மீறலாகும்.இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். நாளை (இன்று 08) பொலிஸில் முறையிட இருக்கிறேன். இது தொடர்பில் சபாநாயகர் தலையீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!