ரஞ்சன் விவகாரத்தில் நீதிமன்றம் தொடர்பாக மக்களுக்கு எழுந்துள்ள நம்பிக்கையீனத்தை இல்லாமல் செய்ய உரிய நடவடிக்கை அவசியம்: விமல்

ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி இதனுடன் தொடர்புட்ட நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் நீதிமன்றம் தொடர்பாக மக்களுக்கு இருந்துவரும் நம்பிக்கையீனத்தை இல்லாமலாக்கவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் இரண்டாம்நாள் விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நீதிமன்ற சுயாதீனத்தன்மை எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்தது என்பது தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகளுடன் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவுகள் நாட்டுக்குள் நீதிபதிகளின் தீர்ப்புக்கள் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம் அதில் தொடர்புபட்டிருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் இன்று நீதிமன்ற தீர்ப்புக்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நிலையை போக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க தனது ஒலிப்பதவுகளை சமூகவலைத்தலங்களில் பதிவிடுவதற்கு இடைக்கால தடை உத்தரவொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றார். நீதிமன்றம் இதற்கு எவ்வாறான தீர்ப்பு வழங்கும் என்று எமக்கு தெரியாது. ஆனால் கடந்த அரசாங்க காலத்தில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

மேலும், அவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட இறுவட்டுக்கள் எவ்வாறு வெளியில் சென்றது என்று கேள்வி கேட்கின்றனர். இந்த ஒலிப்பதிவுகள் பொலிஸாரின் மூலம் வெளிவந்தவையல்ல. மாறாக பொலிஸாரினால் இறுவட்டுக்கள் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் வேறு நபர்களிடமிருந்த ஒலிப்பதிவுகளே சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதனை அடிப்படையாகக்கொண்டே பொலிஸாரும் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டை சோதனை செய்து இறுவட்டுக்களை கைப்பற்றி இருக்கின்றனர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!