பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வீட்டில் தங்கவைத்த பொலிஸ் – விசாரணையில் அம்பலம்!

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை போலீஸ் டி.எஸ்.பி. ஒருவர் காரில் அழைத்துச்சென்ற போது சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ராணுவம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக சென்ற கார் ஒன்றை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவர் போலீஸ் துணை சூப்பிரண்டு தாவீந்தர் சிங் என்பதும் மற்ற 2 பேரும் ஹிஸ்புல் முஜாகிதீன், லஸ்கர்-இ- தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் பெயர்கள் நவீத், ஆஷிப் அகமது என்பதும் தெரிய வந்தது. காரில் இருந்து துப்பாக்கிகள், கையேறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் நவீத் போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அவர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இதையடுத்து 3 பேரையும் கைது செய்து ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். போலீஸ் டி.எஸ்.பி. தாவீந்தர் சிங்கிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பயங்கரவாதிகளுடன் போலீஸ் டி.எஸ்.பி. தாவீந்தர் சிங்குக்கு தொடர்பு இருந்திருக்கிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டி இருக்கிறார்கள். இதற்காக டெல்லி செல்ல அவர்கள் முடிவு செய்து அதுபற்றி தாவீந்தர் சிங்கிடம் தெரிவித்து உதவி செய்யும்படி கேட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தாங்கள் தனியாக சென்றால் மாட்டிக் கொள்வோம் என்பதால் காரில் போலீஸ் அதிகாரி உடன் இருந்தால் எளிதாக தப்பிவிடலாம் என்று முடிவு செய்தனர். இதற்காக போலீஸ் டி.எஸ்.பி. தாவீந்தர் சிங்குக்கு ரூ.12 லட்சம் தருவதாக பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட தாவீந்தர் சிங் காரில் பயங்கரவாதிகளை தன்னுடன் சோபியான் மாவட்டத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அவர் போலீஸ் சீருடையில் இருந்துள்ளார். இதனால் போலீஸ் சோதனையில் யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்துள்ளார். ஆனால் சோதனையில் போலீசார் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இதனால் டெல்லியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி மற்றும் நாசவேலைக்கான சதிதிட்டம் உரிய நேரத்தில் முறியடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் போலீஸ் டி.எஸ்.பி. காஷ்மீரில் உள்ள தனது வீட்டில் 3 பயங்கரவாதிகளை தங்க வைத்து உதவி செய்திருக்கிறார். பயங்கரவாதிகள் வெளியில் எங்காவது மறைந்திருந்தால் போலீசார் பிடித்துவிடுவார்கள் என்பதால் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் பயங்கரவாதிகளுக்கு வேறு எந்த வகைகளில் உதவி செய்திருக்கிறார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதிகளுடன் பிடிபட்டுள்ள தாவீந்தர் சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் வாங்கிய சிறந்த போலீஸ் அதிகாரிக்கான பதக்கமும் பறிக்கப்படுகிறது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் அவர்கள் தாவீந்தர் சிங்கிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதலின் போது கைதான அப்சல்குரு, போலீஸ் அதிகாரி தாவீந்தர் சிங் தனக்கு உதவி செய்ததாக கூறி இருந்தார். மேலும் பயங்கரவாதிகளுக்கு டெல்லியில் அடைக்கலம் கொடுக்க தன்னை நாடியதாகவும் கூறி இருந்தான். ஆனால் இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் தாவீந்தர் சிங் தப்பிவிட்டார். தற்போது பயங்கரவாதிகளுடன் காரில் சென்றபோது போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!