இரண்டுபட்ட ஐ.தே.க? சஜித் தலைமையில் புதிய கூட்டணி – வெளியேற்றப்பட்ட ரணில்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் ஏற்பட்டுள்ள மோதல் நிலையை அடுத்து, புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

விசேட கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் .

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த நேற்றைய தினம் எதிர்பார்க்கப்பட்ட போதும் அது ரணிலால் இழுத்தடிப்பு செய்யப்பட்டதால் புதிய கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாஸ செயற்படவுள்ள நிலையில், பிரதித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க செயற்படவுள்ளார்.

சஜித் தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரம்பரிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து செல்லும் குழுவினர் புதிய கூட்டணியை அமைக்கவுள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படும் நிலையில், பெருமளவானோர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!