மாணவர்களுக்கு மடி கணினி வழங்குவதில் மோசடி

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகளில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரம் குறைந்த மடி கணினிகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அப்போதைய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் நேற்று அவர் மீண்டும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்:

தரம் குறைந்த மடி கணனியை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் போது புற்றுநோய், கண்நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அது வழிவகுக்கிறது.

இந்த நிலையில் தாம் கமிஷன் பெற்றுக்கொள்வதை நோக்காகக்கொண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரழிப்பதற்கு முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அதற்கிணங்க 96,000மடி கணனிகள் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் தற்போதைய கல்வியமைச்சரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தாம் பதவியேற்ற நான்கு நாட்களிலேயே அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் அதனைத் தடைசெய்துள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!