1000 படுக்கைகளுடன் ஐந்தே நாட்களில் கட்டப்படும் மருத்துவமனை: கொரோனா வைரஸை எதிர்கொள்ள சீனா தீவிரம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் 3 கோடி மக்கள் வெளியிடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வருவதால் ஐந்தே நாட்களில், ஆயிரம் படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை கட்டி முடிக்க சீனா தயாராகி வருகிறது. சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 25 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. நோயின் தாக்கம் அதிவேகத்தில் இருப்பதால் வூகான், ஹூவாங்காங் உள்ளிட்ட 11 நகரங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் உள்ள 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கொரோனோ வைரஸ் தாக்கியுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடிவருவதால் மருத்துவர்கள் விழி பிதுங்குகின்றனர். போதிய இடவசதி இல்லாததால் நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வூகான் நகர சாலைகளும், அங்காடிகளும் கொரோனா வைரஸ் பீதியால் வெறிச்சோடிக் கிடக்கின்றன. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வூகான் சாலைகளில் விழுந்து கிடக்கும் வீடியோவும், மற்றவர் கண்முன்னே மயங்கிச் சரியும் அதிர்ச்சிகரமான வீடியோவும் வெளியாகி உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வூகான் நகரில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனையை நிர்மாணிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்படும் இந்த மருத்துவமனை 5 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பிப்ரவரி 3ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழக்கத்தை விட 3 மடங்கு ஊதியம் அதிகமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக 100க்கும் அதிகமான ஜேசிபி இயந்திரங்கள் இரவு பகலாக இயக்கப்பட்டு வருகின்றன. சிகிச்சைக்கு சாதாரண மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ராணுவ மருத்துவர்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லுமாறும், இன்று தொடங்க உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை நிறுத்தி வைக்கவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், சீனப்பெருஞ்சுவர் உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களை மூடுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் இந்தியத் தூதரகங்கள் குடியரசுதின நிகழ்ச்சியையும் ரத்து செய்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!