தொழிற் பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்பு…!

பல்கலைக்கழகங்களில் கற்று வெளியேறும் பட்டதாரிகளுக்கு அரசாங்கம் மிக சிரமங்களுக்கு மத்தியில் அரச துறைகளில் தொழில் வாய்ப்புக்களை வழங்கினாலும் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியாது எனப் பொருளாதார கொள்கை அமுலாக்கல் அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி லெல்லுபிட்டிய தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற 200 மாணவர்களுக்கான கணினி தொழிநுட்ப பாடநெறிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

வளர்முக நாடு என்ற வகையில் இலங்கையின் தொழிற்துறை வினைத்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். கல்வித் தகைமைகளுடன் தொழிநுட்ப மற்றும் தொழிற் பயிற்சிகளும் இருந்தால் மட்டுமே அரச தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற முடியும்.

தொழில் தகைமையற்ற பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு ஏதோ ஒரு வகையில் அரச நியமனங்கள் வழங்கினாலும் க.பொ.த. சாதாரண உயர்தரக் கல்விச் சான்றிதழ்கள் மட்டும் பெற்றுள்ளவர்களுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை பெறும் வாய்ப்பு மிகவும் அரிதானதாகும்.

எனவே குறைந்த கல்வித் தகைமைகள் பெற்றிருந்தாலும் கூட தொழிற்பயிற்சி பெற்றிருந்தால் அரச தனியார் துறைகளில் இலகுவாக தொழில் வாய்ப்புக்களை பெறலாம்.

இவ் விடயத்தில் பெற்றோர்கள் கவனமெடுத்து தமது பிள்ளைகளுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!