சீன காவலர்களுக்கு 500 முகமூடிகளை அன்பளிப்பாக கொடுத்த மர்ம நபர்!

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது. கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவும் இந்த வைரசுக்கு சீனாவில் இதுவரை 132 பேர் உயிழந்துள்ளனர். மேலும், 6061 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சீன மக்கள் பலரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தங்கள் முகங்களில் முகமூடிகளை அணிந்து கொண்டு வெளி இடங்களுக்கு பயணிக்கின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் முகமூடிக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவிவருகிறது.

இந்நிலையில், சீனாவில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்திற்கு முகமூடி அணிந்து வந்த ஒரு நபர் தனது கையில் அட்டைபெட்டியில் மர்மப்பொருளை கொண்டுவந்தார். போலீசார் அவரிடம் விசாரிப்பதற்கு முன்னர் தான் கொண்டுவந்த பெட்டிகளை போலீஸ் நிலையத்தில் இருந்த ஒரு மேஜையில் வைத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெட்டிகளில் என்ன உள்ளது என ஆராய்ந்து பார்த்தனர்.

அப்போது அந்த பெட்டிகளில் 500 முகமூடிகள் இருப்பதை கண்டுபிடித்து அந்த மர்ம நபருக்கு நன்றி தெரிவிக்க பின்தொடர்ந்து சென்றனர். ஆனால், போலீசார் நிலையத்தை விட்டு வெளியே வருவதற்கு முன்னர் அந்த முகமூடி அணிந்த நபர் அப்பகுதியை விட்டு வேகமாக் சென்றுவிட்டார். இதையடுத்து, முகமூடிகளை அன்பளிப்பாக கொடுத்துச்சென்ற அந்த நபருக்கு சல்யூட் அடித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!