மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு முகநூல் காதலியுடன் கும்மாளம் போட்ட அட்டகாச கணவர்!

15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ள ஒருவர், முகநூல் காதலியுடன் ரகசிய குடித்தனம் நடத்தி சிக்கிக் கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இவர் தான் காதல் திருமணம் செய்த மனைவி குழந்தைகளை தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு, முகநூல் காதலியுடன் குடித்தனம் நடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான 45 வயதான ரூபஸ் ஜெரால்டு..! கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்த ரூபஸ் ஜெரால்டு, காட்டாத்துறை கிராமத்தை சேர்ந்த தேவகுமாரியை 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் வரதட்சணை தகராறு ஏதும் வந்து விடக்கூடாது என்று பெண்ணின் பெற்றோர் 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், 101 சவரன் நகையும் கொடுத்துள்ளனர். ஒரு மகன், மகள் என குடும்ப வாழ்க்கை சுமுகமாக சென்ற நிலையில், முகநூலில் மூழ்கிக் கிடந்த ரூபஸ் ஜெரால்டுக்கு முகநூலில் கிடைத்த தோழியால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் உருவானது.தினமும் பல மணி நேரம் முகநூலில் சாட்டிங் செய்த ரூபஸ் அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தினார்.

மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 22 வயதான அந்த இளம் பெண்ணிடம் பித்துப் பிடித்து அலைந்த ரூபஸ், மனைவியின் நகை மற்றும் பணத்தை எடுத்து முகநூல் காதலிக்கு செலவு செய்ய தொடங்கி உள்ளார்.காதலியுடன் கேரளாவுக்கு சென்று காதலை வளர்த்து வந்த ரூபஸின் லீலைகள் ஒவ்வொன்றாக அவரது மனைவிக்கு தெரியவந்தது.தட்டிக்கேட்ட மனைவியிடம் சண்டையிட்டு அவரையும் குழந்தைகளையும் தாய் வீட்டிற்கு விரட்டியதாக கூறப்படுகிறது. முகநூல் காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பொழுதைக் கழித்து வந்துள்ளார் ரூபஸ். இதனை அவரது அக்கம் பக்கத்தினர் மனைவியிடம் தெரிவித்துள்ளனர்.பின்னர் இருதரப்பு பெரியவர்களும் சமாதானம் பேசி ரூபசை முகநூல் காதலியை கைவிடச் செய்து மனைவியுடன் சேர்த்து வைத்துள்ளனர்.

ருசி கண்ட பூனையாக வலம் வந்த ரூபஸ், மனைவிக்கு தெரியாமல் மூலச்சல் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து முகநூல் காதலியுடன் ரகசிய குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்த விவரம் தெரிந்து அதிர்ச்சி அடைந்த தேவகுமாரி, தனது தாய் வீட்டுக்கு சென்றதோடு, கணவனின் காதல் அட்டகாசம் குறித்து, காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரூபஸ் 20 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை அழைத்துக் கொண்டு மனைவியை கொலை செய்யும் திட்டத்துடன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு மனைவி இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி சூறையாடியதோடு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடியடித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல் காதலின் மோகம் தீர்ந்த நிலையில் முகநூல் காதலியிடம் சிக்கி கூலிப்படையாக தலைமறைவான ரூபஸையும் அவரது கூட்டாளிகளையும் காவல்துறையினர் வலை வீசி தேடிவருகின்றனர். முகநூல் காதல், காதலனை போலீசுக்கு பயந்து முட்டு சந்தில் மட்டுமல்ல முச்சந்தியிலும் ஓடவிடும் என்பதற்கு சாட்சியாக மாறியிருக்கிறது இந்த சம்பவம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!