ஜனாதிபதி தலைமையில் இன்று சுதந்திர தினம்- 2500 விருந்தினர்கள்!

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இம்முறை சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொள்ள 2,500 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முப்படையினரின் அணிவகுப்பு, கண்கவர் கலாசார நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரிக்கவுள்ளன. முப்படை அணிவகுப்பில் 4,325 பேர் கலந்துக் கொள்ளும் அதேவேளை, கடற்படையின் அணி வகுப்பில் 868 உறுப்பினர்களும், விமான படையின் 815 உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். 1,382 பொலிஸாரும் 515 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு கொழும்பில் உள்ள 15 க்கும் மேற்பட்ட அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன.

அத்துடன் ஒத்திகை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ள பாதுகாப்பு படையினர் தங்கியுள்ள மஹானாம கல்லூரி, புனித மைக்கல் கல்லூரி மற்றும் புனித மரியாள் பெண்கள் பாடசாலை ஆகிய கடந்த 31 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன.

இதற்கும் மேலதிகமாக கொழும்பு 12 மிஹிது மகா வித்தியாலயம், கொழும்பு 10 அல் ஹிதாயா மற்றும் அசோக வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. இந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறைக்கு பதிலாக வேறு ஒரு தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுதந்திர சதுக்கத்தை அண்டிய சில வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளும் நேற்று மட்டுப்படுத்தப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!