கொழும்பில் தான் போட்டி – அடம் பிடிக்கும் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாது தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வருமாறு அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாது அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்ற அரசியல்வாதிகளில் ரணில் விக்ரமசிங்க இருந்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் 5 லட்சத்து 566 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

எனினும் 2020 ஆம் ஆண்டாகும் போது கட்சிக்குள் ஏற்பட்ட நிலைமைகளுக்கு அமைய அவரது பிரபலம் குறைந்து போயுள்ளது. இதனால் இம்முறை ரணில் விக்ரமசிங்க தனது விருப்பு வாக்கு சாதனைக்கு அருகில் கூட வர முடியாது எனவும் அவர் கடந்த முறையுடன் ஒப்பிடும் போது குறைந்த விருப்பு வாக்குகளையே பெற முடியும் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக தனது விருப்பு வாக்கு சாதனை பாதுகாத்து இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாது தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வருமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் தனது வழமையான பிடிவாத கொள்கையில் எவர் கூறுவதையும் கேட்காது மீண்டும் கொழும்பில் போட்டியிட தீர் மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!