மின்வெட்டு முடிவு ரத்து!

நாளாந்தம் 2 மணி நேரம், மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சார சபை தீர்மானித்திருந்தது. எனினும் அமைச்சரின் தலையீட்டை அடுத்து இந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்திற்காக வழங்கப்பட்டிருந்த கடன் தொகை வரையறைக்கு மேலதிகமாக அதிகரித்ததன் காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்றைய தினம் கரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் எரிபொருளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்தது.

இதனால் கரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் மின்சார உற்பத்தி தடைப்பட்டது. இதையடுத்து நாளாந்தம் 2 மணித்தியாலங்கள் மின் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சார சபை தீர்மானித்தது.

இருப்பினும் இது தொடர்பில் உடனடியாக தலையிட்ட போக்குவரத்து முகாமைத்துவ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு உட்பட்ட வகையில் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்கினார்.

இதற்கு அமைவாக மீண்டும் எரிபொருளை விநியோகிப்பதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்தது. இதன் காரணமாக மின்சார சபையினால் திடீரென ஏற்பட்ட நிலைமையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2 மணித்தியாலத்திற்கு மின்சாரத்தை இடைநிறுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக மீண்டும் தொடர்ச்சியாக மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!