2 ரூபாய்க்கு இயற்கை நாப்கின்: கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

திருச்சி கல்லூரி மாணவர்கள் சீமைக் கற்றாழையைக் கொண்டு இயற்கை வகை நாப்கின்களை 2 ரூபாய் விலையில் விற்பனை செய்யும் வகையில் உருவாக்கியுள்ளனர். மாதவிடாய் காலங்களில் பெண்களின் இன்றியமையாத துணையாக விளங்குவது நாப்கின்கள். தற்காலத்தில் வணிக ரீதியாக உள்ள பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் சார்ந்த நாப்கின்கள் அவர்களின் தேவைகளுக்கு முழுமையான தீர்வளிக்கின்றனவா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. இந்நிலையில் திருச்சி ஜோசப் அரசு உதவிபெறும் கல்லூரியின் தாவரவியல் துறை மூன்றாமாண்டு மாணவர்கள் உருவாக்கியுள்ள புதிய கண்டுபிடிப்பு பெண்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கக் கூடும். மலைவாழ் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சீமை கற்றாழை செடிகளின் நார்களை துணியுடன் இணைத்து பயன்படுத்தி வந்தது ஆய்வில் தெரியவந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். அதனையே சற்று மேம்படுத்தி உருவாக்கினால் என்ன என்ற மாணவர்களின் சிந்தனை கற்றாழை நார் நாப்கின்களின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்துள்ளது.

சீமை கற்றாழையில் இருந்து முதலில் நார்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. மென்மைப்படுத்துவதற்காக அவை ஹைட்ராக்சைடு திரவத்தில் நனைக்கப்படுகின்றன. பின்னர் நார்களை முறைப்படி அடுக்கி நாப்கின் தயாரிக்கப்படுகிறது.இந்த நாப்கின்கள் அல்ட்ரா வயலட் புற ஊதா கதிர்களின் உதவியுடன் சுகாதார முறையில் தயாரிக்கப்படுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். சீமைக் கற்றாழை நாப்கின்கள் நச்சு எதிர்ப்புத் தன்மை கொண்டவை என்பதால் நோய்க்கிருமிகளை அழிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சாதாரண நாப்கின்கள் 7 மில்லி மட்டுமே உறிஞ்சும் தன்மை கொண்டவை. சீமை கற்றாழை நாப்கின்கள் 13 மில்லி வரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. மற்ற நாப்கின்கள் பிளாஸ்டிக் மூலப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் மட்குவதற்கு 700 முதல் 800 ஆண்டுகள் ஆகும். இயற்கை வகை கற்றாழை நாப்கின்களின் எளிதில் மட்கும் தன்மை கொண்டது.

பொதுவாக நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரம் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் வரை ஆகும். ஆனால், கற்றாழை நாப்கின் இயந்திரத்தின் விலை 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்பதால் பெண்களின் சுய தொழிலுக்கு கைகொடுக்கும். தனியார் நாப்கின்கள் 22 முதல் 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படும் நிலையில், கற்றாழை வகை நாப்கின்கள் 2 ரூபாய்க்கு விற்பனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!