யாழ். பல்கலைக்கழக ராகிங் கொடுமை- மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இதுகுறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் ரி.கனராஜாவினால், யாழ்.பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி தொழிநுட்பப் பீடத்தில் இடம்பெறும் பகிடிவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் என்பது தொடர்பான செய்திகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல இணையத்தளங்களில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களின் ஒளிப்படங்கள் மற்றும் அவர்கள் அனுப்பிய தொலைபேசி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி தங்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை உடன் தமக்கு அனுப்பி வைக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடிதத்துக்கு அமைய அறிக்கை வழங்குவது என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் ஒழுக்கம் தொடர்பான உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!