ஜெனிவாவில் தொடங்கிய அமர்வு – இலங்கைக்கும் நெருக்கடி!

இலங்கை உட்பட 32 நாடுகளில் உள்ள வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான 530 க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக ஐ.நா.சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழுவின் கூட்டம் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து தனிப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் போனவர்களின் தொடர்ச்சியான நடைமுறை பற்றிய தகவல்களை இந்த குழுவில் உள்ள 5 நிபுணர்கள் கேட்டறிந்து கொள்ளவுள்ளனர்.

வலுக்கட்டாயமாக காணாமல் போவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான பிரகடனத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட தடைகள், சட்டம் மற்றும் நடைமுறைகள் அல்லது வலிந்து காணாமல் போன வழக்குகளைத் தீர்ப்பதில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து நிபுணர்கள் ஆராய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்குழு, தனது 40 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொது கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து அன்றைய தினமே பகல் 1 மணிக்கு விசேட செய்தியாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இடம்பெறும் செயற்குழுவின் மீதமுள்ள அமர்வு தனிப்பட்ட முறையில் நடைபெறுகின்றது.

இந்த செயற்குழுவில் அர்ஜென்டினா, கொரியா, மொராக்கோ, லிதுவேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த ஐந்து சுயாதீன நிபுணர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அமர்வு இலங்கைக்கும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!