வாக்குகளை சிதறடிக்க முனைகிறார் விக்கி!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை பதவிக்கு ஆசைப்பட்டு ஒரு தனிக்கட்சியை உருவாக்கி, தெற்கில் உள்ள பேரினவாதிகள் விரும்புவது போன்று வாக்குகளைச் சிதறடிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியளாலர்களின் கேள்விகளுக்குப் பதிலிறுக்கும் போதே இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

‘மாற்றுத் தலைமை என்கின்ற விடயத்தினை மையப்படுத்தி தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பினை வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உருவாக்கியுள்ளதாக அறிந்துள்ளோம். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்.

அதன் பின் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசை கொண்டவர். கடந்த கலங்களில் கூட மாற்றுத் தலைமை என்கின்ற விடயத்தினைக் கையில் எடுத்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வந்தார். இதன் ஊடாக அவர் ஒரு தலைவராக வர வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகின்றார் என்பது தெளிவாகின்றது.

பொதுவாகவே விக்னேஸ்வரன் அவர்கள் முன்னுக்குப் பின் முறனான கருத்துகளையே கூறிவருகின்றார். அவரது முதுமை அரசியல் சார்ந்த முதுமை அல்ல. பாராளுமன்றத்தில் வென்று எம்மோடு இணைந்து செயற்பட விரும்புகின்றார் என்றால், கொள்கையளவில் ஒத்துச் செல்லக் கூடிய கட்சியுடன் தலைமைப் பதவியின்றி அவரால் செயற்பட முடியாதா? தேர்தலுக்கான கூட்டணி இல்லை என்று கூறுகின்றார், ஆனால் தேர்தலின் போதுதான் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல, அந்த வேளையில் நான் ஓய்வுக்கு பின்னர் சிவ சிவா என்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது என்னை அரசியலில் கொண்டு நிறுத்தி சிக்கல்படுத்தி விட்டார்கள் என்று கூறினார்;. ஆனால் இப்போது அந்த அரசியலுக்கும் மேலாகச் சென்று ஒரு தனிக்கட்சியை உருவாக்கி தெற்கில் உள்ள பேரினவாதிகள் விரும்புவது போன்று வாக்குளைச் சிதறடிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!