வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்து வெற்றி பெற்ற ‘மொட்டு’ உறுப்பினருக்கு எதிராக வழக்கு

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மதுரகெட்டிய உள்ளூராட்சி சபை உறுப்பினர், தரங்க திசநாயக்கவுக்கு எதிராக, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

புதிய உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தின் கீழ், வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் கடந்த பெப்ரவரி 10ஆம் நாள் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது, 40 மில்லியன் ரூபாவை செலவிட்டார் என்று மொனராகல மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று முதல்முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

”இது ஒரு முக்கியமான வழக்கு. ஏனென்றால், 1970களின் தொடக்கத்துக்குப் பின்னர், தேர்தல் சட்டங்களை மீறிய குற்றத்துக்காக எந்தவொரு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியும் தமது பிரதிநிதித்துவத்தை இழக்கவில்லை.

பல வேட்பாளர்கள் தாம் வெற்றி பெற்ற முறைகள் பற்றிப் பொருட்படுத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகின்றனர்.

இதனால் அரசியல்வாதிகள் தைரியமாக உள்ளது . அவர்கள் தேர்தல் சட்டங்களை மீறிவருகின்றனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு ஏனைய அரசியல்வாதிகளுக்கு ஒரு தெளிவான செய்தியை கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மையம் மற்றும் பவ்ரல் ஆகிய கண்காணிப்பு அமைப்புகள் தாக்கல் செய்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!