தினமும் 64 புதிய புற்றுநோயாளிகள்!

இலங்கையில் தினமும் புற்றுநோயினால், 38 பேர் உயிரிழக்கின்றனர் என்றும், தினமும் 64 புதிய நோயாளிகள் இனம் காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக பொது மருத்துவ நிபுணர் டொக்டர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.

இன்று கொரனா வைரஸ் குறித்து செலுத்தப்படுகின்ற கவனம் புற்று நோய்கள் தொடர்பில் செலுத்தப்படுவதில்லை. புற்று நோய்கள் காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் உயிரிழக்கின்றனர். இவ்வாறான ஆபத்தை கொரனா தோற்றுவிக்கவில்லை.

புற்று நோய்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் 2018 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலகில் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆண்கள் அதிகளவில் உள்ளாவதாகவும் இலங்கையில் வாய்ப்புற்று நோய்க்கே, அதிகளவான ஆண்கள் உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை பொறுத்தவரை உலகில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் மார்பு புற்று நோய்க்குத்தான் அதிகம் உள்ளாகின்றனர்.

இலங்கையின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி 2018 ஆம் ஆண்டில் 23 ஆயிரத்து 530 பேர் புற்றுநோய்க்கு உள்ளாகியதாக இனம் காணப்பட்டுள்ளனர். இது நாளொன்றுக்கு 64 பேர்களாக பதிவாகியுள்ளது.

இந்நோயினால் அவ்வருடம் 14 ஆயிரத்து 13 பேர் (14013) பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி 38 பேர் தினமும் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் மரணத்தை ஏற்படுத்தும் தொற்றா நோய்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் புற்று நோயைத் தவிர்த்துக் கொள்வது தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!