சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த ரணில்!

பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்ட ஆளும் தரப்பைச் சேர்ந்த சுதந்திரக் கட்சி பின்வரிசை உறுப்பினரின் பெயர் வாபஸ் பெறப்பட்டதாலேயே ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழிந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு சு.கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயை தெரிவு செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சபையில் கூறினார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்தை முன்வைத்தார்.

‘ஐ.தே.க தரப்பிற்கு சபாநாயகர் பதவியும் சுதந்திரக் கட்சிக்கு பிரதி சபாநாயகர் பதவியும் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கும் வழங்கவே உடன்பாடு காணப்பட்டது. பிரதி சபாநாயகர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அரச தரப்பில் அங்கஜன் இராமநாதன் பெயர் முன்வைக்கப்பட்டது. சில கட்சிகள் அதனை எதிர்த்தன. அரச தரப்பில் அனுபவமுள்ள பின்வரிசை எம்.பிகள் இல்லாத நிலையில் அரச தரப்பில் ஐ.தே.க பின்வரிசை எம்.பி ஒருவரை பிரேரித்தோம். சு.க தரப்பில் ஒருவர் நியமிப்பதில் பிரச்சினை கிடையாது. சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் பதவிகள் அரச தரப்பில் இருந்தே நியமிக்கப்பட வேண்டும். சு.கவுடன் இணைந்தே அரசாங்கம் உருவாக்கப்பட்டது. உடன்பாட்டுடன் பின்வரிசை எம்.பியின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

சு.க தரப்பில் பிரேரிக்கப்பட்ட எம்.பியை உங்கள் (த.தே.கூ) தரப்பு தான் எதிர்த்தது, நாம் எதிர்க்கவில்லை. இது வரை நாம் இணைந்து செயற்பட்டோம். உங்கள் தேவைகளை மதித்து செயற்பட்டோம். சு.க தமது வேட்பாளரை வாபஸ் பெற்றது. சு.க பின்வரிசையில் தகுதினாவர் இல்லாததால் வேறு மாற்று வழியின்றி ஆளும் தரப்பில் இருந்து ஒருவரை பிரேரித்துள்ளோம். ஆளும் தரப்பில் உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் பிரதி அமைச்சர்கள் எவரும் தமது பதவிகளை கைவிட்டு பிரதி சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடத் தயாராகவில்லை என்பதாலேயே ஆளும் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்வைத்துள்ளோம். எனவே இதற்கு சகலரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!