பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி! – சுதர்ஷினி வருத்தம்

பிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி தனக்கான தோல்வி அல்ல என்றும் அது பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆனந்த குமாரசிறி தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சபையில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே இதனைக் கூறினார்.

‘முதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு முதற்தடவையாக பெண் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே என்ற நபருக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. பெண் ஒருவருக்கு ஏற்பட்ட தோல்வியாகும். இருந்தபோதும், பாராளுமன்றத்தின் உயர் பதவி ஒருவருக்கு பெண் ஒருவர் போட்டியிடும் நிலைக்கு முன்னேறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

தனது பெயரை முன்மொழிந்த எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஆதரவு வழங்கி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியல் வரலாற்றில் செனட் சபையாக இருந்தபோது முதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவர் இருந்துள்ளார். பெண் ஒருவர் அடுத்த சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றார்.

தமது ஆட்சியிலேயே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!