பிரான்சில் மரணமான யாழ். இளைஞன்! – 8 பேருக்கு வாழ்வு கொடுத்தார்

பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் எட்டுப் பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளையைச்சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (வயது 29 ) என்ற இளைஞரே மூளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பால் திடீரென உயிரிழந்துள்னார்.

அவரின் உடல் உறுப்புக்கள் எட்டுப்பேருக்கு தானமாக வழங்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர் உயிரிழப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அதிதீவிர சிகிச்சையளிக்கப்பட்டபோதும் , அவர் மூளைச்சாவடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரை காப்பாற்ற முடியாதென்ற நிலையில் உறவினர்களின் சம்மதத்துடன் அவர் கருணைக் கொலை செய்யப்பட்டார்.

தனது உடல் உறுப்புக்களை தானம் செய்ய வேண்டுமென அவர் தனது விருப்பத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்த நிலையில், அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது உடல் பாகங்கள் தானம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, இருதயம் மற்றும் ஈரல் பிரச்சனைகளால் உயிரிழக்கும் தறுவாயில் இரண்டு நோயாளர்கள் இருக்கும் விடயம் தெரியவரவே, அவர்களுக்கு அந்த பாகங்கள் தானமாக வழங்கப்பட்டன.

விசேட உலங்குவானூர்தி மூலமாக, இருதயம் கொண்டு செல்லப்பட்டு அந்த நோயாளிக்கு மாற்றப்பட்டது. இருதயம், ஈரல் மாற்றப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்கள் உயிர்பிழைத்தனர்.

இதயம், ஈரல், நுரையீரல், பித்தப்பை, சிறுநீரகம், வழித்திரை உள்ளிட்ட எட்டு உடல் பாகங்களை சாருஜன் தானம் செய்திருந்தார்.

இதேவேளை இறந்த பின்னரும் தன் உறுப்புகளை தானம் செய்த குறித்த யாழ் இளைஞருக்கு பிரான்ஸ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!